LOADING...
TVK Stampede: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; நிவாரணம் அறிவிப்பு, விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு
பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது

TVK Stampede: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; நிவாரணம் அறிவிப்பு, விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2025
11:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பல குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று, சனிக்கிழமை (செப்டம்பர் 27, 2025) கரூரில் நடந்த TVK பேரணியில் ஏற்பட்ட நெரிசலில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காரணம்

60,000 பேர் திரண்டதே காரணம் எனத்தகவல்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு, அனுமதிக்கப்பட்ட அளவை (கிட்டத்தட்ட 1000) விடப் பன்மடங்கு அதிகமாக, சுமார் 60,000 பேர் திரண்டதே இந்தச் சோகத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நெரிசல் ஏற்பட்டபோது பலருக்கு மூச்சுத் திணறியதாகவும், நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிவாரணம்

 ரூ.10 லட்சம் நிவாரணம், தனி நபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் 

இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ருபாய் நிவாரணமும், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க விரைவான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.