தவெக பட்ஜெட் 2026-27: ரூ.2,500 உரிமைத்தொகை, இலவச சிலிண்டர் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இல்லை
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெறாதது மகளிர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிக்கையில் பெண்களின் பொருளாதார பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்ட பல அதிரடித் திட்டங்கள் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக பெண்கள் அதிகம் எதிர்பார்த்த, மாதம் தோறும் வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு இடம்பெறவில்லை. அதோடு, ஆண்டிற்கு 6 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் இடம்பெறவில்லை. வறுமையிலுள்ள ஆதரவற்ற மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ.3,000 மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவி திட்டங்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கான உதவித்தொகை
வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் 12-ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
அரிசி தவிர அனைத்துப் பொருட்களும் பாக்கெட்டுகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கோதுமை மாவு மட்டுமே பாக்கெட்டாக விநியோகிக்கப்படும் என மாற்றப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படவில்லை.
விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற பிரதான வாக்குறுதியும், மண்டலம் வாரியாக அளிக்கப்பட்ட சிறப்பு அறிவிப்புகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.