வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல், திருப்பதி பிரம்மோற்சவ விழா துவக்கம்
ஆந்திராவின் பிரபலமான திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் இரண்டு விதமான பிரமோற்சவ விழாக்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. ஒன்று வருடாந்திர பிரமோற்சவ விழா, மற்றொன்று நவராத்திரி உற்சவம். வரும் செப்டம்பர் 18 -26 ஆம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 15 - 23 ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது என கோவில் அறங்காவலர் கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். பிரமோற்சவ வழக்கப்படி, முதல் நாள் இறைவனுக்கு சாத்தப்படும் பட்டு வஸ்திரங்கள் அரசாங்க சார்பில் வழங்கப்படும் என்று கருணாகர் ரெட்டி கூறியுள்ளார்.
VIP தரிசனத்திற்காக சிபாரிசுகள் ஏற்கப்படமாட்டாது
பொதுவாக விழாக்காலங்களில் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருவதுண்டு. பிரமோற்சவ காலங்களில், பொதுமக்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் தவிப்பதாக கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த வருடத்திலிருந்து, பொது மக்களுக்கு முன்னுரிமை தரும் வகையில், இந்த இரு பிரம்மோற்சவங்களுக்கும் விஐபி தரிசன சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என்றும் கருணாகர் ரெட்டி மேலும் கூறியுள்ளார். அதேபோல், வாகன சேவை, அன்னதானம், லட்டு விநியோகம் உள்ளிட்ட அனைத்திலும் சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.