ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச்.29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைப்பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது அவரை கடத்திய மர்ம கும்பல் அவரை கொலை செய்து திருச்சி-கல்லணை சாலையில் ஆற்றங்கரையோரம் தூக்கி வீசப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீ ரங்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
10 வருடங்களுக்கு மேல ஆகியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை
இந்த வழக்கின் விசாரணை சிபிஐ, சிபிசிஐடி வசம் கொடுக்கப்பட்டும் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் இந்த வழக்கில் இல்லை. இந்நிலையில் இந்த வழக்கினை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது இவ்வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு ஒரு வருடமாக விசாரித்து வருகிறது. இதனையடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 13 பேரிடம் நீதிமன்ற அனுமதியோடு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தனித்தனியே விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு முடிவு
மேலும் இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த புலனாய்வு குழு முடிவு செய்ததாகவும் தெரிகிறது. இத்தகைய சூழலில் தான் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வருபவர் பிரபாகரன்(45) என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது. ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 9ம் தேதி தான் சிறப்பு புலனாய்வு குழு இவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
அலுவலகத்திற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல்
இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலுவையில் ஜாமீனில் வெளிவந்துள்ள இவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று(டிச.,11)இரவு கையெழுத்திட்டுள்ளார். அதன் பின்னர் தனது அலுவலகத்திற்கு சென்று அமர்ந்துள்ளார். அப்போது அவரது அலுவலகத்திற்குள் வந்த 3 மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறை அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்த நபர்களுள் 4 பேர் கைது
இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகள் கொண்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், திருச்சி-அரியமங்கலம் பகுதியினை சேர்ந்த பஷீர்(29), லட்சுமணன்(38), ரியாஸ் ராஜேஷ்(24), தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஷ் பைலட்(28) உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் தலைமறைவான அப்பு என்னும் ஹரிஹரனை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.