திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் ஓர் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கொத்தனார் கோபியின் மகன் மெளலீஸ்வரன்(15) 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று(மார்ச்.,11) பள்ளிக்கு சென்றுள்ளார். பகல் 12.30 மணியளவில் பள்ளி வளாகத் திடலில் அமர்ந்து மாணவர்கள் படித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்கள் சிறு சிறு கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடியதாக தெரிகிறது. அப்போது தங்கள் மீது மெளலீஸ்வரன் தான் கற்களை வீசியதாக தவறாக எண்ணிய 3 சக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் 3 பேரும் மெளலீஸ்வரனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மரத்தில் மோதி மாணவனின் தலையில் படுகாயம்
அப்போது அருகில் இருந்து மரத்தில் மெளலீஸ்வரன் தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் அலறி துடித்துள்ளார், அவரது அலறல் சத்தம் கேட்ட ஆசிரியர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்துவிட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி வளாகம் முன்பு கூடி கோஷமிட்டனர். இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அந்த 3 மாணவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.