பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா, பயிற்சி அகாடமியில் ஆஜராவதற்கான காலக்கெடு முடிவடைந்தது; அடுத்து என்ன?
சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போலி ஊனமுற்றோர் மற்றும் சாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) செவ்வாயன்று தனது குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் அஜார் ஆகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது தேர்வு பற்றிய சர்ச்சை வெடித்ததால், பூஜா கேத்கர் அகாடமிக்கு திரும்ப அழைக்கப்பட்டார் மற்றும் அவரது பயிற்சி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், ஜூலை 23 ஆம் தேதிக்குள் அறிக்கைகளை சமர்பிக்குமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். முசோரியில் உள்ள LBSNAA அரசு ஊழியர்களுக்கான பயிற்சி நிறுவனமாகும்.
பூஜா மீது சட்ட நடவடிக்கை பாயக்கூடும்
ஏற்கனவே, யுபிஎஸ்சி தேர்வில், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி கூடுதல் சலுகைகளை பெறுவதற்காக, உண்மைகளை தவறாக சித்தரித்து, பொய்யாக்கியதற்காக, பூஜா கேத்கர் மீது, யுபிஎஸ்சி மையம் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் அகாடமியின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதும், விசாரணை குழு முன் ஆஜர் ஆகாமல் இருப்பதும் மேலும் சட்ட சிக்கலுக்கு வழி வகுக்கக்கூடும். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், அகாடமியின் ஆணையை மீறியதாக கருதப்பட்டு வழக்கு தொடக்கக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். முன்னதாக, ஜூலை 16 அன்று, மகாராஷ்டிரா கூடுதல் தலைமைச் செயலாளர் நிதின் காத்ரே, பூஜா கேத்கருக்கு எழுதிய கடிதத்தில், அரசுடன் அவரது பயிற்சி காலம் நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.