மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை சாலைகளில் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வாகன நிறுத்தும் இடத்திற்காகவும், கழிப்பறைகளுக்காகவும் காத்துக்கொண்டிருக்கும் நிலை கொடைக்கானலில் நிலவுகிறது என்று குற்றச்சாட்டு எழுகிறது. குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலா தளமாக இருக்கும் கொடைக்கானலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம். இதனிடையே கோடை சீசன் துவங்கியுள்ளதால் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது
வாகன நெரிசலால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை
இதனையடுத்து சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், எரிசாலை, போன்ற நகர் பகுதிகளிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்கிறது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. மக்களும் இந்த வாகன நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறார்கள். மேலும் இவ்வாறு வாகனங்கள் வெகுநேரமாக மலை சாலைகளில் நின்று நின்று செல்வதால் பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் கழிப்பறை இல்லாமல் பெரிதளவில் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள். எனவே மக்கள் சந்திக்கும் இந்த இன்னல்கள் குறித்து நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மலைச்சாலைகளில் ஆங்காங்கே கழிப்பறை மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களை ஏற்படுத்தி தருமாறு சுற்றுலா வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.