Page Loader
ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்
அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்கவிட்ட நபருக்கு அபராதம் விதிப்பு

ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்

எழுதியவர் Nivetha P
Jan 17, 2023
07:39 pm

செய்தி முன்னோட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வன பகுதியில் உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இங்குள்ள நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியரின் அத்துமீறல்கள் அதிகம் நடந்து வந்ததாக தெரிகிறது. இதனை தடுக்க வனச்சரக அலுவலர் மணிகண்டன் என்பவரது தலைமையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இத்தகைய சூழலில் முடீஸ் தாய்முடி எஸ்டேட் என்னும் பகுதியில் அனுமதியின்றி 'ட்ரோன்' கேமரா ஒன்று பறந்து கொண்டிருந்ததை ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பார்த்ததாக கூறப்படுகிறது.

அபராதம்

அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்கவிட்ட நபருக்கு அபராதம் விதிப்பு

இதனை தொடர்ந்து, வனத்துறையினர் அந்த ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நடத்தப்பட்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கென்னிஜாக்சன் (42) என்பவர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு போட்டோ மட்டும் வீடியோக்கள் எடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜாவின் உத்தரவு படி, தகுந்த அனுமதியின்றி வனப்பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட சுற்றுலாப்பயணிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்த தகவலை மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.