தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி
அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து, ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு சில இடங்களில் ரூ.120க்கு மேல் விற்பதாகவும் செய்திகள் வெளியானது. குறிப்பாக தமிழகத்தில், தக்காளி விலை ஏற்றதால், இல்லத்தரசிகளும், உணவகங்கள் நடத்துவோரும் கவலையடைந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் இறுதியில், தக்காளி முதலிய காய்கறிகள், கொள்முதல் விலைக்கே விற்கப்படும் என நேற்று (ஜூன் 27.,) முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்கப்படும் தக்காளி
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள நடமாடும் காய்கறி அங்காடிகள் மற்றும் 65 பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கொள்முதல் விலையில் தக்காளியினை விற்பனைச்செய்ய முடிவுச்செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பண்ணை பசுமை கடைகளில், தக்காளி விலை, கிலோவுக்கு ரூ.60 க்கு விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று வரை, கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.10 குறைந்து, ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை படிப்படியாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.