இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுதான் முதல்முறை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஎன்பிஎஸ்சிக்கு இது ஒரு சாதனையாகும், ஏனெனில் தேர்வு தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, பல்வேறு அரசு துறைகளில் காலியாக 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஜூன் 9, 2024 அன்று குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதி இருந்தனர்.
பணியிடங்கள் அதிகரிப்பு
ஆரம்பத்தில் 6,244 காலியிடங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி கூடுதலாக 480 பணியிடங்களை சேர்த்து, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையை 6,724 ஆக உயர்த்தியது. மேலும் தேவையைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்த்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள், பில் கலெக்டர்கள், ஆவின் நிர்வாக உதவியாளர்கள், வனக் காவலர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் இந்த ஆட்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ், அதிக விண்ணப்பதாரர்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டாலும், முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.