குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செப்டம்பர் 14ஆம் தேதி நடத்திய 2024ஆம் ஆண்டு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான காலியிடங்களை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. தொடக்கத்தில் உதவி ஆய்வாளர், துணைப் பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 2,327 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை (நவம்பர் 9) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் , இதில் புதிதாக 213 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, மொத்த காலியிடம் முன்னர் இருந்த 2,327க்கு பதிலாக, 2,540 ஆக அதிகரித்துள்ளது.
7.93 லட்சம் பேர் விண்ணப்பம்
7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த இந்த காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 14 அன்று தமிழ்நாட்டில் உள்ள 2,763 மையங்களில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் 7.93 லட்சம் விண்ணப்பதாரர்களில் 5.81 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். இது 73% வருகைப் பதிவு ஆகும். முதல் முறையாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கு நேர்காணல் கட்டத்தைத் தவிர்த்து திருத்தப்பட்ட தேர்வுக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு பதிலாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, விண்ணப்பதாரர்கள் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வை எதிர்கொள்வார்கள். அதிகரித்த காலிப் பணியிடங்களுக்கு கூடுதலாக, வனவர் என்ற புதிய பதவியும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.