Loading...
தமிழகத்தில் உச்சக்கட்ட மின் தேவை: ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 வரை வரலாற்று உச்ச விலைக்குக் கொள்முதல்
கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் TNPDCL முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உச்சக்கட்ட மின் தேவை: ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 வரை வரலாற்று உச்ச விலைக்குக் கொள்முதல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
10:43 am

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் மாதத்திலும் தமிழகம் முழுவதும் மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கு தடையற்ற மின் விநியோகத்தை உறுதிசெய்ய கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாயு அடிப்படையிலான மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து அக்டோபர் 31 வரை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 வரை கொடுத்துப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மின் கொள்முதல் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமான தொகையாகும்.

பின்னணி

மின் தேவை உயர்வு மற்றும் அவசரக் கொள்முதல் பின்னணி

மாநிலத்தின் உச்சக்கட்ட மின் தேவையை சமாளிக்க திறந்தவெளிச் சந்தை மூலம் 4,500 மெகாவாட் மின்சாரத்தை அவசரகாலக் கொள்முதல் செய்ய மின்னணு டெண்டர் கோரப்பட்டது.

நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்களில் இருந்து மலிவு விலையில் மின்சாரம் கிடைக்காத சூழலில், வாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அக்டோபர் 12 நள்ளிரவு முதல் அக்டோபர் 31 அதிகாலை 2 மணி வரை 2,062 மெகாவாட் மின்சாரத்தை யூனிட்டிற்கு ரூ.31.99 முதல் ரூ.34.49 வரையிலான விலையிலும், மாலை நேர தேவையைச் சமாளிக்க 2,001 மெகாவாட் மின்சாரத்தை ரூ.33.37 முதல் ரூ.37 வரையிலான விலையிலும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சாதக அம்சம்

வாயு மின் நிலைய ஒப்பந்தத்தின் சாதக அம்சம்

அனல் மின் நிலையங்களை பொறுத்தவரை மின்சாரம் வாங்கினாலும் வாங்கவிட்டாலும் நிலையான கட்டணத்தை வழங்க வேண்டும்.

ஆனால் வாயு மின் நிலையங்களில் மின்சாரத் தேவை குறையும் பட்சத்தில் கொள்முதலைத் தவிர்த்துவிடலாம்.

அத்தகைய நேரங்களில் யூனிட்டிற்கு ரூ.1 என்ற குறைந்தபட்ச நிலையான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என்பதால், மின்சாரத் தேவை வீழ்ச்சியடையும் போது பெரும் நிதி இழப்பு தவிர்க்கப்படும் என அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

திட்டமிடல்

திட்டமிடல் தாமதம் மற்றும் அண்டை மாநில நிலவரம்

மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் மற்றும் காற்ராலை மின் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் 4,000 மெகாவாட் வரை தட்டுப்பாடு நிலவுகிறது.

இதற்காக அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம் செப்டம்பர் 9-ஆம் தேதியே டெண்டர் இறுதி செய்து ஒரு யூனிட் ரூ.16 முதல் ரூ.20 வரை மலிவு விலையில் மின்சாரத்தைப் பெற்ற நிலையில், தமிழ்நாடு அரசு கடைசி நேரத்தில் டெண்டர் வெளியிட்டதால் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT