70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை!
தமிழகத்தை சேர்நத ஒரு பெண் பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கு 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கியுள்ளார். திருப்பதி கோவிலுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் அசையா சொத்துக்கள் இருக்கின்றன. இந்த அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.85,705 கோடியாகும். இது தவிர, தங்கம், வைரம், ஆபரணங்கள் போன்ற பல கோடி மதிப்புள்ள பொருட்களும் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்கு 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை நேற்று நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நன்கொடையைப் பெற்றுக்கொண்ட திருப்பதி தேவஸ்தானம்!
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கோடிவலசா கிராமத்தில் என்.கே.நேமாவதி என்பவர் வசித்து வருகிறார். ஒரு ஓய்வு பெற்ற செவிலியரான இவர் திருப்பதி ஏழுமலையானின் பெரும் பக்தர் ஆவார். ஏழுமலையான் மீது இருக்கும் அதீத பக்தி காரணமாக இவர் தனக்கு சொந்தமான 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை திருப்பதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று திருப்பதிக்கு சென்ற இவர், தேவஸ்தான எஸ்டேட் அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் தன் சொத்தை ஒப்படைத்திருக்கிறார். தற்போது, ஏழுமலையானின் சொத்து கணக்கில் இந்த வீடும் சேர்ந்துள்ளது.