Loading...
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் (TET) வெளியீடு; 1.08 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் (TET) வெளியீடு; 1.08 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி

எழுதியவர் Vasuki
Oct 13, 2026
03:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்தத் தேர்வை நடத்தியது. இதில் அரசு அறிவித்த தளர்வு மற்றும் குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வெற்றி பெற்றுள்ளதால் கல்வித்துறையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மாநில தழுவிய தேர்வு

38 மாவட்டங்களில் 833 மையங்களில் நடந்த தேர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் கடந்த ஜூலை மாதம் இத்தேர்வு மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது.

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஜூலை 4-ஆம் தேதி 221 மையங்களிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஜூலை 5-ஆம் தேதி 612 மையங்களிலும் நடைபெற்றன.

மொத்தம் 833 மையங்களில் நடைபெற்ற இந்த சிறப்புத் தேர்வை எழுத மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

பணி நிரந்தரம்

வெற்றிப் புள்ளிவிவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளின்படி, முதல் தாள் தேர்வை எழுதிய 59,535 இடைநிலை ஆசிரியர்களில் 47,628 பேர் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், இரண்டாம் தாள் தேர்வை எழுதிய 1,60,929 பட்டதாரி ஆசிரியர்களில் 61,153 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தகுதி மதிப்பெண்களில் வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதால், பல ஆண்டுகளாகப் பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பைப் பெற்று பெருத்த நிம்மதி அடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT