இனி கவலை வேண்டாம் மாணவர்களே! திருத்தப்பட்ட விடைத்தாளை RTI மூலம் வாங்கலாம்; மாநில தகவல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில தகவல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஒருவர், தனது விடைத்தாள் நகலைக் கேட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், "தேர்வு முடிந்து 5 நாட்களுக்குள் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது" எனக் கூறி இயக்ககம் அந்த மனுவை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவி மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார்.
உத்தரவு
தகவல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு
மாணவியின் மனுவை விசாரித்த தகவல் ஆணையர், அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்குப் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார். மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள்களின் நகலைப் பெற ஒரு பக்கத்திற்கு 2 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தினால் போதுமானது. விடைத்தாள்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் எவ்வளவு மாதங்கள் பராமரிக்கிறதோ, அந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவு குறித்து அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் தகவல்களை வெளியிட வேண்டும்.
உத்தரவின் பின்னணி
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உத்தரவு
ஏற்கனவே இது தொடர்பான வழக்குகளில், பள்ளி மாணவர்கள் தங்களது திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பெறுவது அவர்களின் உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுத்தேர்வு முடிவுகளில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள் இனி எளிமையான முறையில் தங்களது விடைத்தாள்களை ஆய்வு செய்ய முடியும்.