காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிறைத்துறை டிஜிபி
சிறைக்காவலர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையின் போது இந்த உத்தரவாதத்தை அளித்தார். இதற்கு முன்னதாக தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு உள்துறை செயலாளர், ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர்லி முறை என்பது 19வது நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறை. இதன் மூலம், காவலர்களை பொதுவாக போலீஸ் அதிகாரிகளுக்கு உதவியாக அலுவலகத்திற்கு பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் வீட்டுப் பணிகளுக்கு கூட பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் காவலுக்கு போதிய காவலர்கள் இல்லை என வழக்கு
புழல் சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்றும், ஒரு அறையில் 60 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், புழல் சிறையில் ஒரு ஷிப்டுக்கு 60 வார்டன்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 15 வார்டன்கள் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள வார்டன்கள் ஆடெர்லி காவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் உயர்நீதிமன்ற பெஞ்ச், ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபிக்கு உத்தரவு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, சிறைக்காவலர்களை வீட்டு வேலை மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்தார்.