'ரூ.35 கொடுத்து மின்சாரம் வாங்குவது இதற்காகத்தான்': அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து குறையாமல் உள்ளதால் மாநிலத்தின் மின்சாரத் தேவை எதிர்பாராத விதமாக 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மத்திய மின் தொகுப்பில் போதுமான மின்சாரம் கிடைக்காததாலும், காற்றாலை மின்சார உற்பத்தி 3,000 மெகாவாட் வரை குறைந்ததாலும், என்.எல்.சி.யிலிருந்து வரவேண்டிய 1,800 மெகாவாட் மின்சாரம் தடைபட்டதாலும் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாலை நேர உச்சகட்ட தேவையைச் சமாளிக்க யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை கொடுத்து குறுகிய கால டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
கூடுதல் செலவு
உச்சக்கட்ட தேவைக்கு தினமும் ரூ.5 கோடி கூடுதல் செலவு
அமைச்சர் மேலும் பேசுகையில், "அக்.15 முதல் அக்.31 வரையிலான காலகட்டத்தில் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான பீக் ஹவர்ஸ் நேரப் பயன்பாட்டிற்காக மட்டுமே 1,500 மெகாவாட் மின்சாரம் ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளது".
"3,500 மெகாவாட்டுக்கு டெண்டர் கோரப்பட்டாலும் தேவையான 1,500 மெகாவாட் மட்டுமே வாங்கப்படும். இதனால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படும்".
"அதிக விலை கொடுத்தாவது இந்த மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கவில்லை என்றால், தமிழகத்தில் தினசரி 2 முதல் 3 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டு
முந்தைய திமுக ஆட்சியின் மீது குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் மின்சாரத்துறைக்குத் தேவையான நீண்டகால செயல்திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாததே தற்போதைய கடுமையான நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் என்று அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது வழக்குகளைக் கவனிப்பதிலேயே கவனம் செலுத்தியதாகவும், துறையின் வளர்ச்சியை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டதாகவும் அவர் சாடினார்.
திமுக ஆட்சியில் 50 சதவீதமாக இருந்த தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தியைத் தற்போது அரசு 75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகவும், அசாமிடமிருந்து ஏற்கனவே 430 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.