பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
நீட் தேர்விற்கு படிப்பதற்காக, வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளது சென்னை காவல்துறை. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். இவரது மனைவி மெர்லினா. இவர்கள் வீட்டில் பணிபுரிந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பட்டியலின பெண் ரேகாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் புகார் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவிய நிலையில், பொது மக்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
தலைமறைவான MLA மகனும், மருமகளும்
இந்த விவகாரம் தொடர்பாக MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவர் மீதும் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து MLA கருணாநிதியிடம் கேட்டபோது, தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என கூறினார். இந்நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மறறும் அவரது மனைவி மெர்லினாவையும் பிடிக்க, போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.