'ரூ.8 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி': அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பி மோசடி
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் பதவியை விலைக்கு வாங்கி தருவதாக கூறி பிரபல அரசியல் பிரமுகர்கள் பெயரில் போலியான சான்றுகளை உருவாக்கி பல கோடிகளில் பேரம் பேசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கை உருவாக்கி மோசடியில் ஈடுபட முயன்றதாக சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நிஸ்வாக் என்பவர் அளித்த புகாரின் பேரில், வெங்கடேஷ் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் மீது போலி மின்னணு ஆவணங்களை தயாரித்து ஏமாற்ற முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோசடி
ரூ.8 கோடி பேரம் மற்றும் வீடியோ கால்
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், வேலூரை சேர்ந்த ரூபன் ராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த சக்தி அர்ஜுன் ஆகியோர், தயாளன் என்பவரிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தெரியும் என்றும், ரூ.8 கோடி கொடுத்தால் வேலூர் தொகுதி எம்.எல்.ஏ வினோத் கண்ணனுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளனர்.
போலி மின்னஞ்சல் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி நம்ப வைத்த நிலையில், சந்தேகமடைந்த MLA வீடியோ காலில் பேசியபோது ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
குற்றவாளிகள் கைது மற்றும் பொருட்கள் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, வேலூரை சேர்ந்த ரூபன் ராஜ் (27) மற்றும் சென்னையை சேர்ந்த சக்தி அர்ஜுன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் இதே பாணியில் வேறு யாரையேனும் ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும், இந்தச் சதியில் வேறு நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.