தமிழகத்தில் GPS இல்லையென்றால் கனிம வளங்கள் ஏற்றிச் செல்ல தடை: இன்று முதல் அமல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் GPS கருவி பொருத்துவதை கனிம வளத் துறை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத லாரிகள் கனிம வளங்களை எடுத்துச் செல்ல முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
விதிகள்
அவகாசம் நிறைவு & விதிகள் அமல்
கனிம வள கடத்தலை கண்காணிக்க லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த முதற்கட்டமாகச் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
அக்டோபர் 31 உடன் கெடு முடிந்த நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
டிஜிட்டல் கண்காணிப்பு
கடத்தலைத் தடுக்க டிஜிட்டல் கண்காணிப்பு
ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாமல் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
விதியை மீறும் லாரி உரிமையாளர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கனிம வளத் துறை எச்சரித்துள்ளது.
அமைக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் அமைப்புகள் மூலம் கனிம வளம் ஏற்றப்படும் இடம் முதல் சென்று சேரும் இடம் வரை லாரிகளின் பயணப் பாதை நேரலையாக கண்காணிக்கப்படும்.
அரசு கொண்டு வந்துள்ள இந்த அதிரடி டிஜிட்டல் கண்காணிப்பு நடவடிக்கை மூலம் மாநில எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத கனிம வளக் கடத்தல் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.