தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலுக்கான விலை மிக குறைவாக அளிக்கும் காரணத்தினால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலினை வழங்கி வருகிறார்கள். இதனால் ஆவின் பால் பண்ணையில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மத்திய பால் பண்ணையில் பொது மேலாளரை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியார்கள் சங்கத்தினர் ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து அவர்களது கோரிக்கையினை அரசு ஏற்காவிடில் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் கொள்முதலை வழங்கும் பால் உற்பத்தியாளர்கள்
தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலினை ரூ.35ல் இருந்து 38 வரை விற்பனை செய்து வருகிறது. ஆனால் ஆவின் பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.32 வரை தான் விற்பனை செய்து வருகிறது. இதில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.28 தான் சென்றடையும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதலை வழங்கிவருகிறது. இதனால் மதுரை ஆவின் பால் பண்ணையில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 92 ஆயிர லிட்டராக இருந்த பால் கொள்முதல், தற்போது ஒரு லட்சத்து 38 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. இதனையடுத்து பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.