தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யும் ஆவின்
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனையடுத்து பால் வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் நேரில் சென்று அப்பகுதிகளில் தீவிர ஆய்வினை மேற்கொண்டார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பாலினை விநியோகம் செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பனி காலம் என்பதால் நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், தூத்துக்குடி பகுதியில் சாலை விபத்து காரணமாக பால் விநியோகம் தாமதமானது என்றும் கூறினார். தமிழகத்தில் தற்போது வரை பால் தட்டுப்பாடு என்பது ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் இனிப்பு வகைகள் விற்பனையை கண்டு பயப்படும் தனியார் நிறுவனங்கள்
மேலும் பேசிய அவர் ஆவின் இனிப்பு வகைகள் அதிகம் விற்பனையாவதை கண்டு தனியார் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள் என்றும் கூறியது குறிப்பிடவேண்டியவை. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் 'கவ் மில்க்(Cow Milk) என்னும் பெயரில் புதிய ரக பாலினை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. அந்த பாலில் 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்டு தயாரிக்கவுள்ள நிலையில், ஒரு லிட்டர் ரூ.22.50க்கு விற்பனை செய்யவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பால் தட்டுப்பாடு காரணமாக 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்டு தயாரிக்கப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.