
கேளிக்கை பூங்காக்களில் ராட்சத ராட்டினம் இயக்க புதிய அரசாணை: சுற்றுலாத்துறையிடம் கட்டாய அனுமதி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கேளிக்கை பூங்காக்களில் (Amusement Parks) நிரந்தர ராட்சத ராட்டினங்களை (Permanent Giant Wheels) இயக்குவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அனுமதிகளை பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்கும் வகையில், ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கான இணையதளம் விரைவில் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த புதிய நடைமுறைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிமுறைகள்
முக்கிய விதிமுறைகள்
புதிய அரசாணையின்படி, ராட்சத ராட்டினங்களை இயக்கவும் அமைக்கவும் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: சுற்றுலாத்துறை அனுமதி: கேளிக்கை பூங்காக்களில் நிரந்தர ராட்சத ராட்டினங்களை இயக்க, கட்டாயம் சுற்றுலாத்துறையிடம் (Tourism Department) அனுமதி பெற வேண்டும். புதிய ராட்டினங்களுக்கான சான்று: புதிதாக ராட்சத ராட்டினம் அமைக்கும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட துறையிடம் ISO தரச்சான்று கட்டாயம் பெற வேண்டும். ஏற்கனவே உள்ள ராட்டினங்கள்: தற்போது ராட்டினங்கள் அமைத்துள்ளவர்கள், இந்த அரசாணை வெளியிடப்பட்டதில் இருந்து 6 மாதங்களுக்குள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தற்காலிக ராட்டினங்களுக்கான அனுமதி: திருவிழாக்கள் அல்லது தற்காலிக அமைப்புகளுக்காக ராட்சத ராட்டினங்களை இயக்க சம்பந்தப்பட்ட துறைகளிடம் (தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை போன்றவை) கட்டாயம் அனுமதி பெற வேண்டும்.