மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்
மருத்துவ கழிவுகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் மற்றும் துணைச் செயலர் ஆகியோர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு(தெற்கு அமர்வு) ஒரு கடிதம் எழுதியுள்ளனர். திறந்த இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடும் வண்ணம் தமிழ்நாடு சட்டம் 14-ன் கீழ் இருக்கும் 'குண்டர்' சட்டம்(1982) பற்றிய விளக்கத்தை விரிவுபடுத்த உள்ளதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது. மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக திறந்த வெளியில் கொட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் குழு
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பி.செந்தில் குமார், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச்-2021 முதல் பதிவு செய்யப்பட்ட இது தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்தார். கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், பஞ்சாயத்து கூடுதல் இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவை மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைத்துள்ளது. இந்த குழு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை கண்காணித்து, அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.