உணவுத்தரம் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் நம்பர் - தமிழக அரசு
உணவுத்தரம் குறித்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஆய்வு செய்ய துவங்கினர். அதன்படி 15,236 உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,572 உணவகங்கள் தரமற்ற உணவுகளை விற்பனை செய்கிறது என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், 5,018 கெட்டுப்போன இறைச்சிகள் அழிக்கப்பட்டதோடு ரூ.8,79,800 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் தேங்காய் சட்னி, மோர், தயிர் போன்ற உணவுகளையும் 7,760 உணவகங்களில் சோதனை செய்த அதிகாரிகள் 238 கடைகளில் தரமற்ற உணவுகள் உள்ளதை கண்டறிந்து ரூ.1,47,000 அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.10.26,800 அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதுகுறித்து ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
அந்த அறிக்கையில், உணவு வணிகர்கள் அனைவரும் உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு குறித்து சுய மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். உணவு வணிகர்களுக்கான சங்கங்கள் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், உண்ண தகுந்த தரமான உணவினை தேர்வு செய்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, உணவின் தரம் குறித்த புகார்களை அளிக்க TN Food Safety Consumer App'ஐ பயன்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் புகார்களை 94440 42322 என்னும் வாட்ஸ்அப் எண் மூலமும் பதிவு செய்யலாம் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.