தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய அக்.31 கடைசி நாள்: தவறும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசின் அனைத்து துறை ஊழியர்களும் தங்களது முழுமையான சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்களின் பெயர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறாது என்றும் தலைமைச் செயலாளர் சாய்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு ஊழியர்கள் தங்களின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள், வங்கிச் சேமிப்புகள், நகைகள், வாகனங்கள், கடன்கள் மற்றும் பினாமி பெயர்களில் உள்ள சொத்து விவரங்கள் அனைத்தையும் 'ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின்' (IFHRMS) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேறு நபர்களின் பெயரில் சொத்து வாங்கியிருந்தால், அவருக்கும் அரசு ஊழியருக்கும் உள்ள உறவுமுறையை தெளிவாகக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு
பதவி உயர்வு பாதிக்கும் என எச்சரிக்கை
அரசு பணியில் சேர்ந்த 3 மாதங்களுக்குள்ளும், அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி 2010 ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்திருந்தது.
தற்போது இத்திட்டம் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாத ஊழியர்கள் அரசு விதிமுறைகளை மீறியவர்களாகக் கருதப்பட்டு, அவர்களின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், சட்டவிரோதமாகச் சொத்து குவிப்பதைத் தடுக்கவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.