ஹோட்டல் மற்றும் டீ கடைகளுக்கு நற்செய்தி! மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்; சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கத் தமிழக அரசு அதிரடி
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.03.2026) நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் இங்கே:-
மானியம்
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்
எரிவாயு தட்டுப்பாட்டினால் உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன் போன்றவை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனைச் சமாளிக்க, கேஸ் அடுப்புகளுக்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின் நுகர்விற்கு, ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள எரிவாயுப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்தச் சலுகை தொடரும்.
கடன் உதவி
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான கடன் உதவி
எரிவாயுவைப் பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மின் அடுப்புகள் மற்றும் மின் சூடேற்றிகள் போன்ற உபகரணங்களை வாங்குவதற்குப் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது: UYEGP திட்டம்: 25% மானியம் (அதிகபட்சம் ₹3.75 லட்சம்). மகளிர் தொழில் முனைவோர் திட்டம்: 25% மானியத்துடன் ₹10 லட்சம் வரை கடன். அண்ணல் அம்பேத்கர் திட்டம்: 35% மானியம் (அதிகபட்சம் ₹1 கோடி வரை).
விலக்கு
விறகு மற்றும் பிற எரிபொருட்களுக்கு விலக்கு
தொழிற்சாலைகள் எல்பிஜிக்கு மாற்றாக விறகு, மண்ணெண்ணெய் அல்லது பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்அனுமதி பெறத் தேவையில்லை. இது குறித்த தகவலை மட்டும் வாரியத்திற்குத் தெரிவித்தால் போதுமானது. இந்த விலக்கு எரிவாயுத் தட்டுப்பாடு நீங்கும் வரை நடைமுறையில் இருக்கும். உணவகங்கள் மூடப்படுவதால் விவசாய விளைபொருட்களின் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க, தமிழகத்தில் உள்ள 194 உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களது காய்கறிகள் மற்றும் பழங்களை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து உபரிப் பாலைத் தடையின்றிப் பெற்றுக்கொள்ளவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.