தேர்தல் 2026: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மீது தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க, பணப் பரிமாற்றங்களை கண்காணிப்பதில் தேர்தல் ஆணையம் இந்த முறை புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிக அளவில் டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பப்பட்டால், அது தேர்தல் ஆணையத்தின் 23 சிறப்பு அமைப்புகளால் கண்காணிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விதிமுறைகள்
பொதுமக்களுக்கான விதிமுறைகள்
முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் எடுத்து செல்ல அனுமதி இல்லை. ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் அதற்கான ஆதாரங்களை (Source of money) காண்பிக்க வேண்டும். ஆவணங்கள் இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை அதிக அளவிலான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.