இருமொழி கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள், திட்டமிட்டபடி நாளைய தினம் வெளியாக உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்துப் பேசினார். "மாணவ சிங்கக் குட்டிகள் எதிர்காலத்தைக் காட்டும் நவீன சிப்பி; ஒரு நாட்டின் பொக்கிஷமே அவர்கள்தான்" எனக் குறிப்பிட்ட அமைச்சர், வகுப்பறையில் ஆசிரியர்கள் குறைவாகப் பேசி, மாணவர்களை அதிகமாகப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், 'Education is Celebration' என்ற தாரக மந்திரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோரிக்கை
ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குத் தனிக்குழு
பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் சிறகடித்துக் கொண்டும், சந்தோஷமாகவும் வரும் சூழ்நிலையை ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், ஆசிரியர்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் அதைத் தன்னிடம் மனுவாக அளிக்கலாம் என்றும், அந்த மனுக்களை சீராய்வு செய்யத் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கொள்கை
பிஎம் ஸ்ரீ திட்டம்: கொள்கையில் மாற்றமில்லை
மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) திட்டம் குறித்தும், அதில் உள்ள மும்மொழி கொள்கை குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "முந்தைய திமுக அரசைப் போலவே, புதிய தமிழக வெற்றி கழக அரசும் இருமொழிக் கொள்கையில் மிக உறுதியாக உள்ளது. எந்தவொரு வெளி அழுத்தத்திற்கும் புதிய தவெக அரசு அடிபணியாது; மாநிலத்தின் சுயமரியாதைக் கொள்கையில் சமரசம் கிடையாது" என்று திட்டவட்டமாகக் கூறினார்.