"உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்": முதல்வர் ஸ்டாலின்
நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்" - என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! "
"தொழிலாளர்களை உயிராக மதிக்கும் திமுக"
"திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம். தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது." "1969-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது." "தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த "மே" தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் முதல்வர்.