முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்தாக பாஜக ராஜ்யசபா எம்.பி சையது ஜாபர் இன்று(ஏப் 21) கூறியுள்ளார். பாஜக தலைமை அலுவலகத்தில் 'DMK ஃபைல்ஸ்' என்ற தலைப்பில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்திருக்கிறார். "ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வருடத்தில் சம்பாதித்த ரூ.30,000 கோடி பற்றிய தகவலை ஸ்டாலினுடைய நிதி அமைச்சர் செய்தியாளரிடம் பேசியபோது வெளியிட்டார். அவர்களுடைய முக்கிய கவலையே அதை எங்கே, எப்படி மறைக்கலாம் என்பது மட்டும் தான்." என்று பாஜகவின் சையது ஜாபர் இஸ்லாம் கூறினார்.
சபரீசனுக்கு இங்கிலாந்தில் இரண்டு நிறுவனங்கள் இருக்கிறது: எம்.பி சையது ஜாபர்
வி.சபரீசன் இங்கிலாந்தில் இரண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார். இந்த நிறுவனங்கள் சட்டவிரோதமாக சம்பாதிப்பதற்கான வழிகளே தவிர வேறில்லை என்றும் அவர் கூறினார். "ஒரு வருடத்தில் அவர்களால் இவ்வளவு பணத்தை வேறெதிலும் சம்பாதித்திருக்க முடியாது. இவை அனைத்தும் சாமானியரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சாமானியர்களுக்கு செலவழிக்க வேண்டிய பணத்தை தமிழக முதல்வர் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் சிலர் கொள்ளையடித்துள்ளனர்." என்று கூறிய எம்.பி சையது ஜாபர், "ஒருபுறம் ஊழலுக்கு எதிராக மோடி ஜி நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் தி.மு.க குடும்பமும் காந்தி(ராகுல் காந்தி) குடும்பமும் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதில் மூழ்கி கொண்டிருக்கின்றன." என்றும் தெரிவித்துள்ளார்.