55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது. இன்று காலை, டெல்லி செங்கோட்டையில் காலை 7:30 மணி அளவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, சென்னையில், தலைமை செயலகத்தில், காலை 9 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார். முன்னதாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திற்கு 8:30 மணி அளவில் வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொடியேற்றி வைத்த பின்னர் தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
"ஒற்றுமையால் கிடைத்த விடுதலை அதே ஒற்றுமையால் காப்போம்"
அப்போது அவர், " தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல". "புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து சேவை என பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம். பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். ஒற்றுமையால் கிடைத்த விடுதலை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்" எனத்தெரிவித்தார்.