ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்களை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.20 கோடியே 13 லட்சம் செலவில் 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள், 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் இன்று(ஏப்ரல்.,10) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக ரூ.2 கோடி மதிப்பில் 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் ரூ.67 லட்சம் மதிப்பிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகள் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட்ட 2,828 குடியிருப்புகள்
தொடர்ந்து அவர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துரையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட்ட 2,828 குடியிருப்புகளையும் அவர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் செயல்படும் சென்னை பெருநகர் வளர்ச்சி கழகத்தின் சார்பில் ரூ.19.98 கோடி மதிப்பில் தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா, இரும்பு மற்றும் எக்கு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலை பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.