
கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற முதல்வர் விழுப்புரம் விரைகிறார்
செய்தி முன்னோட்டம்
கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியான சம்பவத்தினையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,15) விழுப்புரம் செல்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவர் புதுச்சேரி மாநிலத்திலிருந்து சாராயத்தினை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார்.
எக்கியர்குப்பம் மீனவர் பகுதியினை சேர்ந்த பலர் இவரிடம் நேற்று முன்தினம் மாலை இந்த கள்ளச்சாராயத்தினை வாங்கி குடித்துள்ளார்கள்.
இதனையடுத்து அவர்களுள் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் 39 பேருக்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
முதல்வர்
பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
இதற்கிடையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கள்ளச்சாராயம் அருந்தி விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று செல்கிறார்.
கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவுள்ளார்.
மேலும் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருவோர் வயிறு வலி, மூச்சு திணறல், நரம்பு பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.