முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்
தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது. அதேப்போல் இத்திட்டம் குறித்த அறிவிப்பு இந்தாண்டு நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது இந்த திட்டம் குறித்த விளக்கத்தினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார். அதன்படி, மீனவ மகளிர், நடைபாதையில் வணிகம் செய்வோர், ஒருநாளைக்கு பல்வேறு வீடுகளில் வீட்டுவேலை செய்யும் பெண்கள், கட்டுமானத்தொழில் செய்யும் பெண்கள், சிறியக்கடைகள்-வணிக கடைகள் போன்ற சிறுசிறு நிறுவனங்களில் பணிபுரிந்து குறைந்தளவு வருமானம் பெறும் பெண்கள் போன்றோருக்கு இந்த உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த, இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உதவி தொகை
கூட்டத்தின் நிறைவாக, வருகிற செப்டம்பர் 15ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு உரிமைத்தொகை கிடையாது. பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 'முத்தமிழறிஞர் கலைஞர்' பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.