தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இதனிடையே அமைச்சரவையில் நேற்று(மே.,9) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றங்களை செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த பதவிக்கு மாற்றாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 11ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவி பிராமணம் செய்து வைக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அமைச்சரவையில் புதிதாக பதவியேற்கவுள்ள டிஆர்பி ராஜா அவர்கள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடவேண்டியவை.
ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம்
மேலும் அமைச்சர் நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக கூறப்படுவது என்னவென்றால், அமைச்சர் நாசர் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். பால்வளத்துறையினை சரியாக கவனிக்காத காரணத்தினால் கொள்முதல் பிரச்சனை, விநியோக பிரச்சனை என்று ஆவினுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இதற்கு காரணம் என்றால் தலைமை பொறுப்பில் உள்ள நாசரும் அதற்கு பொறுப்புத்தான் என பால்முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆவின் சார்பில் பெட்ரோல்பங்குகள் தொடங்கப்பட்டு அதற்கான அனுமதியினை தனது மகன் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர்மீது புகார் எழுந்துள்ளது. அதே போல் வெண்ணெய், பட்டர் போன்ற பொருட்களை மகாராஷ்டிராவில் இருந்து வாங்கி அதிலும் முறைகேடு செய்யப்படுவதாக வெளியான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.