2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலினை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் மிகமுக்கியமானதாக பள்ளிகல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள் கருதப்படுகிறது. அதன்படி, இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கென ரூ.40,299கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டமானது விரிவாக்கம் செய்யப்படும். இதன் விரிவாக்கத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1,500 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறைக்கு கீழ் கொண்டுவரப்படும். இதன்மூலம், ஆசிரியர்களும் சமப்பயன்களை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் திறனை மேம்படுத்த 'இன்டெர்ன் ஷிப்' திட்டம்
மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களும் பயன்பெற ரூ.110 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும். ரூ.10 கோடி செலவில் இலக்கிய திருவிழா, சர்வதேச புத்தக கண்காட்சி ஆகியன நடைபெறும். மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக இணையத்தளம் அமைக்கப்படும். தொடர்ந்து, 3,50,000 புத்தகங்கள் கொண்ட மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து உயர்கல்வி துறைக்கு 6,967கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.200கோடி செலவில் 26 புது பாலிடெக்னிக் கல்லூரிகள், 56 கல்லூரிகளில் புது வகுப்பறைகள் ஆகியன கட்டப்படவுள்ளது. சூளகிரியில் அதிநவீன திறன்மேம்பாட்டு மையம் ரூ.80கோடி செலவில் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன்களை அதிகரிக்க 'இன்டெர்ன் ஷிப்' திட்டமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.