தமிழக பட்ஜெட் 2026-27: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.38,000 கோடி கடனுதவி மற்றும் 'சிங்கப்பெண்கள்' திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 நிதிநிலை அறிக்கையில், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில் 'சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்' எனும் புதிய திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், நிலையான தொழில்முனைவோர் செயல்திறனை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சுயஉதவிக் குழு நிறுவனத்திற்கும் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
வங்கிக் கடன் இலக்கு
ரூ.38,000 கோடி வங்கிக் கடன் இலக்கு
நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.38,000 கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடன்கள் மற்றும் மானியங்கள் வழங்கும் முறை முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு, நிதி எவ்வித தாமதமுமின்றி நேரடியாக அவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, பெண்களின் திருமண நாளில் 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ஒட்டுமொத்தமாக திருத்த மதிப்பீடுகளில் ரூ.39,609 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.