தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியாவதையொட்டி, முன்னதாகவே முதலமைச்சர் விஜய், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு, முடிவுகளை எவ்வித சிக்கலுமின்றி உரிய நேரத்தில் வெளியிட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அரசு தேர்வுகள் இயக்குநர் க.சசிகலா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற இந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த முடிவுகளை முறைப்படி வெளியிடுகிறார்.
முறை
இணையதளங்கள் வழியாகப் பார்க்கும் முறை
மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்களின் தேர்வு முடிவுகளை எளிய முறையில் அறிந்துகொள்ள பிரத்யேக இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. www.tnresults.nic.in www.dge.tn.gov.in results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளில், மாணவர்கள் தங்களது தேர்வுப் பதிவெண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் நேரடியாகத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
வாட்ஸ்அப்
எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் புதிய வசதி
இணையதளப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களின் மொபைலுக்கு SMS மூலமாகவும் முடிவுகள் அனுப்பப்படவுள்ளன. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பத்தின் போது வழங்கிய மொபைல் எண்களுக்கு இந்த எஸ்எம்எஸ் தானாகவே வந்து சேரும். இதுதவிர, இந்த ஆண்டு கூடுதலாக 78452 52525 என்ற எண்ணை மொபைலில் சேமித்து, வாட்ஸ்அப் உரையாடல் மூலமும் முடிவுகளைப் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தேர்வர்கள் 14417 என்ற அரசு உதவி மைய எண்ணைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.