அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர்
அந்நியச் செலவாணி நிர்வாகச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரிலையன்ஸ் ADA குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி மீது வழங்கு பதிவு செய்து கடந்த திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை. அனில் அம்பானியை விசாரணைக்கு ஆஜாராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலேயே, அவருடைய மனைவி டீனா அம்பானியையும் விசாரணைக்கு ஆஜாராகக் குறிப்பிட்டிருக்கிறது அமலாக்கத்துறை. ஆனால், விசாரணையில் இருந்து ஒரு வார காலம் டீனா அம்பானி விலக்கு கேட்டிருந்த நிலையில், டீனா அம்பானியை விசாரணைக்கு ஆஜராகக் கோரி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இன்று மும்பையில் அமலாக்கத்துறையின் முன்பு விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார் டீனா அம்பானி. பாண்டோரா பேப்பர்ஸ் வழக்கு தொடர்பான குற்றாச்சாட்டுகளின் கீழேயே அனில் அம்பானியும், டீனா அம்பானியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனில் அம்பானி மீதான அமலாக்கத்துறையின் வழங்கு:
உலகின் பல்வேறு முக்கியப் புள்ளிகளின் பணமோசடி குறித்த தகவல்கள் பாண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரின் கீழ் வெளியிடப்பட்டது. அதில், வெளிநாடுகளில் கடன் வாங்கி அனில் அம்பானி பணமோசடி செய்திருப்பதாவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2007-ல் வெளிநாட்டு வங்கிகளில் கடன் வாங்கி, ரூ.2,000 கோடி வரை இந்தியாவிற்கு அம்பானி கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனைக் கடனாக இந்தியாவிற்குள் கொண்டு வந்தாரா அல்லது அந்நிய நேரடி முதலீடாகக் கொண்டு வந்தாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகிறது அமலாக்கத்துறை. மேலும், அந்நிய நாட்டு வங்கிகளில் அவர் வாங்கிய கடன் திரும்ப செலுத்தப்பட்டவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அதனை அனில் அம்பானி செலுத்தினாரா அல்லது வேறு நிறுவனங்களின் மூலம் தன்வசமே வைத்திருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.