சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை கடற்கரை-எழும்பூர் ரயில் நிலையம் இடையே 4வது வழித்தடம் அமைக்கப்படவுள்ளதால் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் பறக்கும் ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைநகர் சென்னையில் ஏற்படும் கூட்டநெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள நினைக்கும் மக்கள் ரயில் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.279 கோடி மதிப்பீட்டில் 4 கி.மீ., தொலைவிற்கு சென்னை கடற்கரை-எழும்பூர் வழித்தடத்தில் 4ம் வழித்தடம் அமைக்கும் பணி துவங்கவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. எனவே, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் அடுத்த 7 மாதங்களுக்கு சிந்தாந்திரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் அறிவித்துள்ளார்.
ரயில்கள் சேவைகள் நிறுத்தப்படாது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதி
மேலும் அவர் பேசுகையில், சென்னை மாநகரில் ஒரு டிக்கெட் மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் திட்டமானது பரிசீலனையில் உள்ளது என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையேயான பறக்கும் ரயில் சேவை 7 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் அதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையேயான பறக்கும் ரயில் சேவை நிறுத்தும் திட்டம் கைவிடப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.