தனிமையில் வாடும் கைதிகளுக்காக பசு சிகிச்சை அறிமுகம்; திகார் சிறையில் புதிய முயற்சி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலையில், கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தனிமையைக் கையாள உதவவும் புதிய முயற்சியாக பசு சிகிச்சை (Cow Therapy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்ஸேனா மற்றும் டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் ஆகியோர் புதன்கிழமை (நவம்பர் 19) சிறை வளாகத்தில் புதிய கோசாலை அல்லது பசுக்களை பராமரிக்கும் இடத்தைத் திறந்து வைத்தனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
நோக்கம்
கைதிகளின் மன ஆரோக்கியம்
இந்த முயற்சி, உறவினர்களின் வருகை அரிதாகக் கிடைக்கும் கைதிகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், நாட்டினுடைய உள்நாட்டுப் பசு இனங்களைப் பாதுகாப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது. தற்போது, வாங்கப்பட்ட மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட 10 பசுக்களுக்கு திகார் சிறை வளாகத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பசுக்களைப் பராமரிக்கும் திறன் இந்தக் கோசாலைக்கு உள்ளது. கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த கைதிகள் இந்தப் பசுக்களுக்கு உணவளித்து பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவை
பசுக்களைப் பராமரிப்பதற்கான தேவை
திகார் சிறையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கக் காரணம், டெல்லியில் கைவிடப்பட்ட மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவதுதான் என்று உள்துறை அமைச்சர் சூட் சுட்டிக்காட்டினார். ஜனவரி 1 முதல் 19 வரை டெல்லி காவல்துறைக்கு 25,000 புகார்கள் வந்துள்ளதாகவும், இருக்கும் கோசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். திகார் சிறையின் இந்த புதிய முயற்சி ஒரு சிறிய தொடக்கம் என்றாலும், அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளைப் பராமரிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் இதை பசு சிகிச்சை என்று குறிப்பிட்டு, தனிமையால் அவதிப்படும் கைதிகளுக்கு இது ஒரு புதிய நம்பிக்கையின் ஒளியை வழங்கும் என்று வலியுறுத்தினார்.
பசு சிகிச்சை
பசு சிகிச்சை எப்படி உதவும்?
இந்த பசு சிகிச்சை, தனிமை உணர்வை நீக்கி, மன அழுத்தத்தைச் சமாளிக்க உதவும் என்றும், கைதிகளிடையே மோதல்களைக் குறைத்து, கருணையை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார். சிறைத் துறைத் தலைமை இயக்குநர் எஸ்.பி.கே.சிங் கூறுகையில், உறவினர்கள் அழைப்பு அல்லது வருகை இல்லாமல் தனிமையில் வாடும் கைதிகளுக்கு உதவுவதற்காக, வெளிநாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உள்ள இத்தகைய விலங்குகளுடன் இணைந்த சிகிச்சைத் திட்டங்களால் இந்த யோசனை ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில் ஹரியானா சிறைகளிலும் இதே போன்ற பசு சிகிச்சை முறை முயற்சி செய்யப்பட்டதும், சுவீடன் போன்ற நாடுகளிலும் விலங்கு சிகிச்சை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.