குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த TTR கைது
அமிர்தசரஸ்-கொல்கத்தா ரயிலில் பெண் ஒருவர் மீது குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் டிக்கெட் பரிசோதகர் இன்று(மார் 14) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த முன்னா குமார் என்பவர் பெண் பயணியின் தலையில் சிறுநீர் கழித்ததனால் லக்னோவில் நேற்று(மார் 13) கைது செய்யப்பட்டார். சம்பவத்தின் போது, அந்த பெண் தனது கணவர் ராஜேஷ் குமாருடன் அகல் தக்த் எக்ஸ்பிரஸின் ஏ1 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்ததாக அரசு ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா விமானங்களில் நடந்த இதே போன்ற சம்பவங்கள்
சம்பவத்தன்று முன்னா குமார் விடுமுறையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "பெண்களுக்கு அவமரியாதை அளிக்கும் இந்த நடத்தை, உங்கள் சொந்த சுயமரியாதைக்கு மட்டுமல்லாமல், மொத்த ரயில்வேக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது" என்று வடக்கு ரயில்வே கைதுசெய்யப்பட்ட நபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. எனவே, அவரை உடனடியாக பணி நீக்கம் செய்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த ரயில்வே அமைச்சர் "இதை சகித்துக்கொள்ள முடியாது. உடனடி பணி நீக்கம் செய்யப்பட்டார்" என்று கூறியுள்ளார். ஏர் இந்தியா விமானங்களில் இதே போன்ற இரு வழக்குகள் பதிவாகிய சில வாரங்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.