ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகம் உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்(மார்ச்.,25) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதிக்கு செல்லும் சாலையோரம் 30வயது மதிக்கத்தக்க ஆண்யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனை பார்த்த அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர்களும், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அந்த அறிக்கையில் யானைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சண்டையில் இந்த 30 வயது மதிக்கத்தக்க யானை பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த யானையின் தந்தங்களை பத்திரமாக வெட்டிஎடுத்து சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பிரேதபரிசோதனை செய்த இடத்திலேயே அந்த யானையின் உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது.
தாய் யானை மற்றும் 2 வயதுடைய குட்டி யானை உயிரிழப்பு
இதே போல் அந்தியூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் கண்ணில் ஒரு பெண் யானையும், குட்டி யானையும் இறந்து கிடந்தது தென்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் முன்னிலையில் யானைகளுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் யானைகள் மேடான பகுதியிலிருந்து சரிந்து விழுந்ததில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பெண் யானைக்கு 30 வயதும், குட்டி யானைக்கு 2 வயதும் இருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்து போன அந்த இரண்டு யானைகளின் உடல்கள் மற்ற வன விலங்குகளின் உணவுக்காக அப்படியே விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.