LOADING...
21 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்

21 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்

எழுதியவர் Vasuki
May 25, 2026
05:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக அரிய நிகழ்வாக, சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்ற வெறும் 21 நாட்களிலேயே அதிமுகவைச் சேர்ந்த 3 முக்கிய எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரைச் சந்தித்துத் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்த அவர்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்துத் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைத்துக் கொண்டனர்.

ராஜினாமா

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் சந்திப்பு

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகிய மூவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்துத் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதங்களை வழங்கினர். அதிமுகவின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணியின் ஆதரவு அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும், தேர்தல் முடிந்து 21 நாட்களிலேயே இந்த தார்மீக முடிவை எடுத்துள்ளது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மூவரும் நேரில் சந்தித்து தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

அரசியல் நகர்வு

பலம் பெறும் தவெக

அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் சட்டமன்றத்திற்குத் தேர்வான மூவரும், புதிய அவை கூடி பணிகள் தொடங்குவதற்குள்ளாகவே தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு மற்றொரு புதிய கட்சியில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தொகுதி மேம்பாட்டுப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கவும், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்குத் தார்மீக ஆதரவளிக்கவும் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தவெக-வில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ராஜினாமாக்கள் காரணமாக மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய மூன்று தொகுதிகளும் காலியானதாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியுடன் இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.

Advertisement