ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜராத்தில் வதோதரா பகுதியில் மூவரும் பிடிபட்ட நிலையில், அதில் ஒருவர் அடில் ரஃபிக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இருவரும் ரஃபிக்கின் உறவினர் மற்றும் நண்பர் ஆவார். மூவரையும் கைது செய்துள்ள போலீசார், என்ன நோக்கத்திற்காக மிரட்டல் மின்னஞ்சலை அவர்கள் அனுப்பினர் என விசாரித்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட சாதனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
11 இடங்களில் குண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சலில் மிரட்டல்
ரிசர்வ் வங்கிக்கு நேற்று வந்த மிரட்டல் மின்னஞ்சலில், இந்த வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகள் தகர்க்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த மின்னஞ்சலில், 11 வெடிகுண்டுகள் மும்பை நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை மதியம் 1:30 மணிக்குள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகவிட்டால், அதை வெடிக்க செய்து விடுவதாகவும் மிரட்டி இருந்தனர். 'கிலாபத் இந்தியா' என்ற கணக்கில் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சலில், ரிசர்வ் வங்கி இன்னும் சில வங்கிகள் உடன்சேர்ந்து, மிகப்பெரிய நிதி மோசடியை நடத்தி இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த பகுதிகளுக்கு சென்ற காவல்துறையினர், அங்கு வெடிகுண்டு இல்லாததை உறுதிசெய்தனர்.