கர்நாடக நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்
பாகிஸ்தானில் இருந்து கர்நாடக மாநில நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் செய்தி தொடர்பு அதிகாரியான கே.முரளிதர், தனக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மிரட்டல் விடுக்கப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்தார். அவருக்கு வந்திருக்கும் வாட்ஸ்அப் செய்தியில், நீதிபதி முகமது நவாஸ், நீதிபதி எச்.டி.நரேந்திர பிரசாத், நீதிபதி அசோக் ஜி நிஜகன்னவர்(ஓய்வு), நீதிபதி ஹெச்.பி. சந்தேஷ், நீதிபதி கே.நடராஜன் மற்றும் நீதிபதி பி.வீரப்பா உள்ளிட்ட 6 உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும், பாகிஸ்தானில் உள்ள வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அந்த மிரட்டலில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, கே.முரளிதர் அளித்த புகாரின் பேரில் ஜூலை 14-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
'இது போன்ற அச்சுறுத்தல் தீவிரமானது அல்ல': புலனாய்வு முகமைகள்
அந்த நீதிபதியை தொடர்பு கொண்டிருக்கும் மர்ம நபர்கள் மெய்நிகர் எண்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் விவகாரம் உட்பட பல பிரச்சினைகள் குறித்து அவர்கள் நீதிபதிகளிடம் பேசி அச்சுறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, மர்ம நபர்களின் எண்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற மிரட்டல் அழைப்புகள் வதந்தியை கிளப்புவதற்காக மட்டுமே செய்யப்படுகின்றன என்றும், இதில் உண்மைத் தன்மை இல்லை என்றும் புலனாய்வு முகமைகள் கண்டறிந்துள்ளன. இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது போன்ற அச்சுறுத்தல் தீவிரமானது அல்ல என்று புலனாய்வு முகமைகள் தெரிவித்துள்ளன.