சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்
கடந்த 27ம் தேதி ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்தியளவிலான சிலம்பம் போட்டியானது நடத்தப்பட்டது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 2000 மாணவ-மாணவிகள் பங்குபெற்றனர். இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ-மாணவிகள் பங்குபெற்றுள்ளனர். இதில் 10 பேர் பதக்கங்கள் பெற்ற நிலையில், குறிப்பாக 5 பேர் தங்கப்பதக்கம் வென்று வரும் அக்டோபரில் தாய்லாந்தில் நடக்கவுள்ள சர்வதேச சிலம்ப போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளனர். இந்த 15 பேருமே ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள், வண்டாம்பாலை ராமச்சந்திரன் என்பவர் இவர்களுக்கு இலவசமாக சிலம்பம், வாள்வீச்சு போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறார்.
அரசு உதவியினை நாடும் ஏழை எளிய மாணவர்கள்
தனித்திறன் ஒற்றைக்கம்புப்பிரிவில் ஆண்டிப்பந்தல் அரசு பள்ளியில் 10ம்வகுப்பு படிக்கும் முகமதுபைசல், சூரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம்வகுப்பு படிக்கும் அஜய்வர்மன், அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயிலும் 6ம் வகுப்பு படிக்கும் சுபிக்ஷா, தனியார் பள்ளியில் படிக்கும் வெற்றிமாறன்அபிஷேக் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சர்வதேச சிலம்பாட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள். இந்த ஏழை எளிய மாணவர்களும் பெற்றோர்களும் தற்போது தாய்லாந்து சிலம்பாட்ட போட்டியில் கலந்துக்கொள்ள தமிழக அரசு உதவவேண்டும் என்னும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரிய கலைகளை போற்றிப்பாதுகாத்திட பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, இந்த தாய்லாந்து போட்டியில் பங்கேற்க தேவையான நிதியுதவி உள்ளிட்ட அனைத்தையும் செய்தால் தங்களால் சிலம்பத்தில் மென்மேலும் சாதிக்கமுடியும். தாய்லாந்து சிலம்பம் போட்டியிலும் வெல்லமுடியும் என்று திருவாரூர் மாவட்ட மாணவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.