கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி
செய்தி முன்னோட்டம்
பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அக்னி ஸ்தலமாக கருதப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.
இங்கு நடைபெறும் பல்வேறு திருவிழாக்களுள் கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த விழாவில் கலந்துக்கொண்டு மலையில் ஏற்றப்படும் தீபம் மற்றும் சாமியை தரிசனம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த திருவிழா காலத்தில் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நாளை(நவ.,17) முதல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை
அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலையேற தடை
இதனை தொடர்ந்து வரும் 26ம் தேதி மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
இந்த நிகழ்வினை காண வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு, குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று(நவ.,16) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்துள்ளது என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆய்வு கூட்டத்தின் முடிவில் கார்த்திகை தீப திருவிழாவின் பொழுது 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும்,
அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.