சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா நடைபெறுவதையொட்டி, அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும் நாளான திங்கட்கிழமை (அக்டோபர் 27) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், முருகப்பெருமான் அசுரனான சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்குத் திருச்செந்தூர் கடற்கரையில் தத்ரூபமாக நடத்தப்படவுள்ளது.
வசதிகள்
பக்தர்களுக்காக வசதிகள்
தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வைக் காணத் திருச்செந்தூரில் கூடுவார்கள் என்பதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதிசெய்யும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த உள்ளூர் விடுமுறை, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களுக்குப் பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் நவம்பர் 8 ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து மறுநாள் (அக்டோபர் 28) இரவு 11 மணிக்குச் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளது.